'யார் அந்த சார்?' கேள்விக்கு தீர்ப்பில் கிடைத்த விடை
'யார் அந்த சார்?' கேள்விக்கு தீர்ப்பில் கிடைத்த விடை
ADDED : ஜூன் 03, 2025 02:47 AM

அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன், யாரோ ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'சார்' என குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, 'யார் அந்த சார்?' என்ற கேள்வி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
ஞானசேகரன் தன்னிடம் சிக்கிய மாணவியிடம், தான் பல்கலை ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை நம்ப வைத்து திசை திருப்பி மிரட்டவும், 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்திஉள்ளார் என்பது, அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் வாயிலாக தெரிகிறது.
இந்த வழக்கில், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி. மற்றவர்களுக்கு தொடர்பு இல்லை என்ற அரசு தரப்பு வாதம் மற்றும் அதுதொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை, இந்த நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது.
அண்ணா பல்கலை நீண்ட நெடிய வரலாறு உடையது.இந்த வளாகத்தில் செயல்படும் பொறியியல் கல்லுாரிக்கு உலகளவில் நற்பெயர் உள்ளது.இங்கு படிக்கும் மாணவர்களில், 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.
பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவியை, ஞானசேகரன் சீரழித்துள்ளார். இதன் வாயிலாக, பல்கலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும், ஞானசேகரன் தன் செயலால் அவமதித்துள்ளார். இதுபோன்ற அநீதியை ஒரு போதும் ஏற்கவும், அனுமதிக்கவும் முடியாது. குற்றவாளி ஞானசேகரன், 2010 முதல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் மீதான, 37 வழக்குகளில், ஐந்து வழக்குகளில் தண்டிக்கப்பட்டு உள்ளார்; ஒரு சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டு உள்ளார்; மீதமுள்ள வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, எந்த கருணையும் காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.