யாருடன் தே.மு.தி.க., கூட்டணி? மா.செ.,க்களுடன் மீண்டும் ஆலோசனை: பிரேமலதா
யாருடன் தே.மு.தி.க., கூட்டணி? மா.செ.,க்களுடன் மீண்டும் ஆலோசனை: பிரேமலதா
ADDED : ஜன 14, 2026 03:37 AM

சென்னை: ''தை பிறந்தவுடன் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள் தே.மு.தி.க., கூட்டணியை உறுதி செய்யும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பின், பிரேமலதா அளித்த பேட்டி:
தி.மு.க., கூட்டணியில், இப்போது இருக்கும் கட்சிகள் தான் நீடிக்கின்றன; புதிதாக யார் இணைகின்றனர் என அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியிலும் புதிய கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, காத்திருந்து நல்ல முடிவு எடுப்போம்.
எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என, தே.மு.தி.க., மாவட்டச் செயலர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியுள்ளோம். தை பிறந்ததும், தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள், தே.மு.தி.க., கூட்டணியை உறுதி செய்யும்.
அப்படி உறுதி செய்யப்பட்ட கூட்டணி யார் என்பது குறித்து, மீண்டும் மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிப்போம். கூட்டணி முடிவான பின், எந்த தொகுதியில் நான் போட்டியிடுவது என்பது பற்றி அறிவிப்போம்.
நான்காம் கட்ட சுற்றுப்பயணம் நான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளும் உள்ளன. எனவே, ஜனவரிக்குள் கூட்டணியை இறுதி செய்வோம். இவ்வாறு கூறினார்.

