ADDED : ஜூன் 24, 2011 11:20 PM

சென்னை:தமிழக அரசு, மாநிலத் திட்டக் குழுவை விரைவில் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து திட்டக் குழு துணைத் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க.,வின் பிரபல புள்ளிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
அரசியல் சாசனப்படி, ஒரு மாநில முதலமைச்சர் தான், அம்மாநில திட்டக்குழுவின் தலைவராக இருப்பார். இதன்படி, தமிழக திட்டக் குழுவின் தலைவராக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளார். திட்டக்குழுவின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கும்.திட்டக் குழு துணைத் தலைவர் பதவிக்கு, நான்கைந்து பேர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும் பிரபல பொருளாதார வல்லுனருமான ராகேஷ் மோகன், பாதுகாப்பு துறையின் மத்திய அரசுக்கான அறிவியல் பிரிவின் முன்னாள் ஆலோசகர் வி.எஸ்.அருணாச்சலம், தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலர் என்.நாராயணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் தவிர, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட அ.தி.மு.க., வேட்பாளரும், இந்திய ஆட்சிப் பணியாளர் பயிற்சி மையத்தை நடத்தி வருபவருமான சைதை துரைசாமி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த கோவை செழியன், பாவலர் முத்துச்சாமி ஆகியோர் திட்டக் குழு துணைத் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். முந்தைய ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார வல்லுனருமான எம்.நாகநாதன்திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.திட்டக் குழுவில் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் பேராசிரியர் முனைவர் யு.சங்கர் பெயர் அடிபடுகிறது. இவர், முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் திட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசு, அதன் பல்வேறு கொள்கைத்திட்டங்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக பல்துறை வல்லுனர்களை மாநிலத் திட்டக் குழுவில் அமர்த்த உள்ளது.இக்குழுவில், சமூக முன்னேற்ற சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் ஆகியோர் இடம் பெற உள்ளனர்.முந்தைய தி.மு.க., அரசு, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியாண்டான 2011-12ல், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட வரையறையை மேற்கொண்டது.இதனால், மொத்த திட்டச் செலவு 85 ஆயிரத்து 344 கோடி ரூபாயில் இருந்து, 90 ஆயிரத்து 403 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக திட்டக் குழு மறுசீரமைப்பிற்கு பின், மத்திய திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்து நடப்பு 2011- 12ம் ஆண்டுக்கான திட்ட வரையறையை இறுதி செய்யும். இத்துடன், அடுத்த 5 ஆண்டு காலத்தில் மேற்கொள்ள வேண்டியதிட்டங்கள் குறித்தும்இக்குழு வரைவறிக்கையை தயாரிக்கும்.