வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை கொன்றது யார்? குற்றஞ்சாட்டப்பட்டவர் வீடியோ வாக்குமூலம்
வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை கொன்றது யார்? குற்றஞ்சாட்டப்பட்டவர் வீடியோ வாக்குமூலம்
ADDED : ஜன 01, 2026 05:14 AM

டாக்கா: வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஓஸ்மான் ஹாதியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பைசல் கரீம் மசூத், தற்போது துபாயில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஹாதி கொலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசியல் குழப்பங்களுக்கு இடையே, வரும் பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து வங்கதேசத்தில் அடுத்தடுத்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
மாணவர் அமைப்பு ஒன்றின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பைசல் கரீம் மசூத், ஆலம் கீர் ஷேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரும், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பதுங்கி இருப்பதாக வங்கதேச போலீஸ் கூறி வருகிறது.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மசூத், தற்போது, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஹாதியை நான் கொலை செய்யவில்லை. வேண்டுமென்றே சிலர் என் மீதும், என் குடும்பத்தினர் மீது கொலை பழி சுமத்துகின்றனர். அதில் இருந்து தப்பிக்கவே துபாயில் பதுங்கி இருக்கிறேன். ஜமாத் ஏ இஸ்லாமி என்ற அமைப்பைச் சேர்ந்தவர் ஹாதி. அந்த அமைப்பை சேர்ந்தவர் களே ஹாதியை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம்.
நான் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர் என்பதால் தொழில்முறை காரணங்களுக்காக ஹாதியை சந்தித்தேன். அவருக்கு அரசியல் நன்கொடைகளை வழங்கினேன்.
எனக்கு அரசு ஒப்பந்தங்களை பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஹாதி உடனான என் உறவு வணிகரீதியிலானது மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வாயிலாக, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என வங்கதேச போலீசார் வெளியிட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும், ஹாதியை அவர் சார்ந்த ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பே கொலை செய்திருக்கலாம் என வீடியோவில் மசூத் கூறியிருப்பது, இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

