யாருக்கு தேவை ரூ.45 ஆயிரம் கோடி சொத்து; துறவு வாழ்க்கையில் நிம்மதி காண்கிறார் அஜான்!
யாருக்கு தேவை ரூ.45 ஆயிரம் கோடி சொத்து; துறவு வாழ்க்கையில் நிம்மதி காண்கிறார் அஜான்!
UPDATED : டிச 05, 2024 09:49 AM
ADDED : டிச 05, 2024 08:32 AM

கோலாலம்பூர்: 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருந்தாலும், துறவி வாழ்க்கையை விரும்பி வாழ்கிறார் மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணனின் மகன்.
மலேசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன், கடந்த வாரத்தில் காலமானார். அவர் தொடங்கிய நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, செயற்கைக்கோள், எண்ணெய், ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழரான ஆனந்த கிருஷ்ணன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் படித்தவர். இளம் வயதிலேயே தொழில்துறையில் கால் பதித்தவர். அவரது மனைவி, தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். அவரது பெயர் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன். இந்த தம்பதிக்கு அஜான் சிரிபன்யோ என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
ரூ.45,000 கோடி சொத்து இருக்கும் நிலையில், அஜான் சிரிபன்யோவின் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் வளர்ந்த இவர், பிரிட்டனில் கல்வியை முடித்தார். 8 மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர்.
அஜான் சிரிபன்யோ தனது 18வது வயதில் கோடீஸ்வர வாழ்க்கையை துறந்து, புத்த துறவியாக முடிவு செய்தார். முழுக்க முழுக்க அவரது இந்த சொந்த முடிவுக்கு, குடும்பத்தினரும் மதிப்பு கொடுத்தனர்.
காரணம், அவரது தந்தையும் புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் தாய்லாந்தில் ஆன்மீகத்தின் மீது தற்காலிக நாட்டம் கொண்டிருந்த அஜானுக்கு, நாளடைவில் அதுவே வாழ்க்கையாக மாறிப்போனது.
ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்த இவர், தாய்லாந்து - மியான்மர் எல்லை அருகே உள்ள டோ டம் வனப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தங்கி இருந்து சேவைகளை செய்து வருகிறார். எளிமையான வாழ்க்கை உள்ளிட்ட புத்த துறவிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். மக்களிடம் தர்மம் பெற்று தன் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.
சிரிபன்யோ துறவு வாழ்க்கை வாழ்ந்தாலும், அவ்வப்போது குடும்பத்தினருக்காகவும் நேரத்தை ஒதுக்குவது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கிறது.