பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஸ்டாலினுக்கு ஹிந்து முன்னணி கேள்வி
பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஸ்டாலினுக்கு ஹிந்து முன்னணி கேள்வி
UPDATED : அக் 23, 2024 06:06 PM
ADDED : அக் 23, 2024 05:16 AM

திருப்பூர் : 'பக்தி பகல் வேஷம் யார் போடுவது' என, தமிழக முதல்வருக்கு ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவில் உண்டியல் பணத்தை எடுத்துத்தான், இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆனால், விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு. இது என்ன வேஷம்?
கோவிலில் நடக்கும் எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று கொள்வதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே காணொலி காட்சி வாயிலாக மட்டுமே கலந்து கொள்வது எந்த விதமான பக்தி என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்.
கோவிலுக்கு சென்று திருநீறு கொடுத்தால், அதை நெற்றியில் பூசாதது; பூசினாலும் அது வெளியில் தெரியாமல் இருக்க அழிப்பது பகல் வேஷ அரசியலா, அல்லது பசப்பு அரசியலா?
முருகனின் கந்தசஷ்டி கவசத்தையும், வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்தி பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்ற?
தமிழகத்தில், 2,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக ஸ்டாலின் தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொள்கிறார். அதற்காக, செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?
கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட், கோர்ட், கலெக்டர் அலுவலகம் கட்டுகின்றனரே, அதை ஏன் ஸ்டாலின் தடுக்கவில்லை? ஹிந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவது சந்தர்ப்பவாத பகல் வேஷ அரசியல் என்பதையாவது புரிந்து கொள்வாரா ஸ்டாலின்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

