ADDED : மார் 29, 2025 05:05 AM
சென்னை : ''த.வெ.க.,வில் பதவிகளை பணத்திற்காக வழங்கவில்லை; அன்று முதல் இன்றுவரை உண்மையாக உழைத்தவர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேசினார்.
த.வெ.க., பொதுக்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது:
கடந்த 32 ஆண்டுகளுக்கு முன், விஜய் ரசிகராக, சைக்கிளில் வந்து போஸ்டர்களை ஒட்டியவர்களுக்குதான் மாவட்டச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு, மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்தவர் விஜய்.
சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் விஜய் முகம் தான் வேட்பாளர். விஜய் தான் முதல்வராக அமருவார். மொத்தமுள்ள, 68,000 'பூத்' கமிட்டிகளுக்கு, 52,000 பூத்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செயலர்கள் அனைவரும் தனக்கு எம்.எல்.ஏ., 'சீட்' கிடைக்கும் என நினைக்காதீர்கள். விஜய் யாரை கைகாட்டுகிறாரோ, அவர்தான் வேட்பாளர்.
த,வெ.க.,வில் தான் மாவட்டச் செயலர் பதவி, சாதாரண ஆட்டோ டிரைவருக்கும், மாற்றுத்திறனாளிக்கும், மூட்டை துாக்குபவருக்கும், மளிகைக் கடைக்காரருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
புதியவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படும். இன்னும் 3 லட்சம் பதவிகள் கொடுக்க வேண்டியுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.