எல்லா தகவலும் இருக்கும் நிலையில் எதற்காக ரூ.1 கோடியில் அறக்கட்டளை?
எல்லா தகவலும் இருக்கும் நிலையில் எதற்காக ரூ.1 கோடியில் அறக்கட்டளை?
ADDED : செப் 03, 2025 11:10 PM
சென்னை:தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்களின் தரம் மற்றும் அவை கிடைக்கும் பகுதிகள் குறித்து மதிப்பீடு செய்ய, 1 கோடி ரூபாயில் கனிம ஆய்வு அறக்கட்டளை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட், லிக்னைட், சிலிக்கா மணல், களிமண், கூழாங்கல் உள்ளிட்ட 21 வகை கனிமங்கள் எடுக்கப்படுகின்றன.
குவாரிகள் அமைத்து, இந்த கனிமங்களை எடுக்க, கனிமவளத் துறை அனுமதி வழங்குகிறது.
இதில் ஒவ்வொரு கனிமத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில், அதற்கான உரிமக் கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.
இந்நிலையில், கனிமங்களின் சந்தை விலை, அவை எடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் வைத்து, அதற்கு ஏற்ற வகையில் நிலத்தின் வரியை நிர்ணயிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட், லிக்னைட், சிலிக்கா மணல், களிமண், கூழாங்கல் உள்ளிட்ட 21 வகை கனிமங்களின் தரம், அவை கிடைக்கும் இடங்கள் குறித்து மதிப்பிட, கனிம ஆய்வு அறக்கட்டளை துவங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வகை கனிமங்கள் கிடைக்கின்றன என்பது குறித்த ஆய்வு அறிக்கை, கனிமவளத் துறையிடம் உள்ளது.
இதில், கனிமங்களின் அளவு மற்றும் தரம் குறித்த விபரம் அறிந்து, அதன் அடிப்படையிலேயே உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், துறையின் பிரதான பணியை செய்ய, புதிதாக ஒரு அறக்கட்டளையை, 1 கோடி ரூபாய் செலவில் அமைப்பது தேவையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.