மரபணு சோதனைக்கு உட்படாதது ஏன்? : திவாரிக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி
மரபணு சோதனைக்கு உட்படாதது ஏன்? : திவாரிக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 12, 2011 12:39 AM
புதுடில்லி : மரபணு சோதனைக்கு உட்படாதது குறித்து, வரும், 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரிக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதல்வராகவும், ஆந்திர கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்.டி.திவாரி. இந்நிலையில், 'வீட்டில் வேலை செய்த தன் தாயிடம், 32 ஆண்டுகளுக்கு முன், திவாரி தவறாக நடந்ததால், நான் பிறந்தேன். எனவே, என்னுடைய தந்தையாக திவாரியை அறிவிக்க வேண்டும்' எனக் கோரி, ரோகித் சேகர், 31, என்பவர் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, திவாரிக்கு மரபணு பரிசோதனை செய்யும் படி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, திவாரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால், ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்தது.
கடந்த ஜூன் 1ல் திவாரிக்கு மரபணு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், ''மரபணு பரிசோதனை செய்ய என்னை யாரும் நிர்பந்திக்க முடியாது,'' என, திவாரி ஐகோர்ட் பதிவாளரிடம் கடிதம் கொடுத்தார். ''கோர்ட் உத்தரவை திவாரி மீறுவதால் அவர் கோர்ட்டை அவமதித்ததாக கருத வேண்டும்,'' என, ரோகித் மீண்டும் ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட், திவாரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ''திவாரி சுதந்திரபோராட்ட வீரர். நாட்டுக்காக தியாகம் செய்தவர். எனவே, அவரை மரபணு சோதனை செய்து கொள்ளும் படி நிர்பந்தப்படுத்தக்கூடாது. இது அவரது கவுரவத்தை குலைப்பதாகும்,'' என்றார்.
இது குறித்து நீதிபதி கீதாமித்தல் குறிப்பிடுகையில், ''தன் தந்தை யாரென்ற விஷயத்தில் ரோகித் சேகருக்கும் இது கவுரவ பிரச்னை தான். எனவே, வரும் 14ம் தேதிக்குள், மரபணு பரிசோதனை செய்து கொள்ளாமல் இழுத்தடிப்பதற்கான காரணத்தை திவாரி விளக்கம் வேண்டும்,'' என்றார்.