தமிழர்களுக்கு வேலை தராத நிறுவனங்களை அழைத்து வருவது ஏன்: ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
தமிழர்களுக்கு வேலை தராத நிறுவனங்களை அழைத்து வருவது ஏன்: ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
ADDED : ஆக 31, 2024 07:08 AM

சென்னை: 'தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்?' என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்துவந்தபோதே கடும் எதிர்ப்பினை தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்களின் உழைப்பு
போட்டிப்போட்டு தனியார் பெருமுதலாளிகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துவந்து அதையே பெரும் சாதனையாகவும் விளம்பரம் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றிப் பல்லாயிரம் கோடிகள் வரிச்சலுகை, குறைந்த விலையில் நிலம், நீர், மின்சாரம், மனிதவளம் என யாவும் அளித்துச் சொந்த நாட்டுத் தொழில் முனைவோரையும், உள்ளூர் சிறுகுறு நிறுவனங்களையும் மொத்தமாக அழித்து முடித்தன. தனியார் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு மக்களின் உழைப்பினை உறிஞ்சி அடிமைகள் போலவே பயன்படுத்துகின்றன.
வறுமையில் தமிழர்கள்
தமிழ் மக்களின் உழைப்பினையும், தமிழ் நிலத்தின் வளங்களையும் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்ட பிறகு திடீரென நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் ஊழியர்களை நட்டாற்றில் விட்டுச் செல்கின்றன. இதனால் வேலைவாய்ப்பும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர். தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அடிப்படை ஊதியம்
தமிழகத்தில் குடியேறும் வடவர்களால் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களும் அதிகரித்து அதனால் சட்டம் ஒழுங்கும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உழைப்புக்கேற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பதையும் தகர்த்து, மிகக்குறைந்த ஊதியத்திற்கு வடவர்கள் பணிபுரிய முன்வருவதால் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையும் பறிபோய்கிறது. தமிழகத்தில் குடியேறும் வடவர்கள் குறித்துத் தமிழக அரசிடம் என்ன தரவுகள் உள்ளதா?
தமிழருக்கு என்ன பயன்?
தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினைக் கட்டுப்படுத்த திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையைத் தமிழக அரசு சட்டமாக்கப்போவது எப்போது? தமிழருக்கு வேலைவாய்ப்பளிக்காத தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதால் தமிழருக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.