ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள் என பா.ம.க., ஸ்ரீ காந்தி விமர்சித்தது ஏன்? கூட்டணிக்கு பா.ஜ., அழைக்காததால் கோபம்
ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள் என பா.ம.க., ஸ்ரீ காந்தி விமர்சித்தது ஏன்? கூட்டணிக்கு பா.ஜ., அழைக்காததால் கோபம்
ADDED : டிச 31, 2025 07:42 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசை கூட்டணிக்கு அழைக்காததால் ஏற்பட்ட கோபத்தால் தான், அன்புமணி தரப்பை ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள் என, ஸ்ரீ காந்தி விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, 'அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமானால், தனியாக கட்சி துவங்கட்டும். பா.ம.க., என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை.
'இனி ஊர் ஊராக, வீடு வீடாக வருவேன். துரோகத்தை வீழ்த்த உறுதி ஏற்போம். ஜி.கே.மணியை, தி.மு.க., கைக்கூலி என மேடைக்கு மேடை அன்புமணி முழங்குகிறார். இதை சொல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள்' என, கடுமையாக விமர்சித்தார்.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ராமதாஸ் பேசி வருவதாக கூறப்படும் நிலையில், அன்புமணி தரப்பை ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள் என ஸ்ரீ காந்தி கூறியிருப்பது பா.ம.க., வினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
பா.ஜ., தலைமை அன்புமணியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அதனால் தான் தேர்தல் கமிஷன் அன்புமணிக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அ.தி.மு.க.,வுடன் பேசி கூட்டணியில் இணைந்து விடலாம்.
அதன் வாயிலாக அன்புமணியை தனிமைப்படுத்தலாம் என ராமதாஸ் நினைத்தார். இதற்காக சி.வி.சண்முகத்திடம் தொடர்ந்து பேசினார்.
அதன்பின்னும், பா.ஜ., தலைமை ராமதாசை கண்டுகொள்ளவில்லை. சென்னை வந்த பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், தொலைபேசியில் கூட ராமதாசிடம் பேசவில்லை.
இதனால், பா.ஜ., தலைமை மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார்; பழனிசாமியும் அவரிடம் பேசவில்லை.
அந்த கோபத்தில் தான், ஜி.கே.மணியை தி.மு.க., கைக்கூலி என்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள் என, அன்புமணி தரப்பை ஸ்ரீ காந்தி விமர்சித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீ காந்தி பேசும்போது, 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். அப்படி அமையும் ஆட்சியில் பா.ம.க., பங்கு பெறும்' என்று குறிப்பிட்டார்.
கூட்டணிக்காக தி.மு.க.,விடம் இருந்து சாதகமான பதில் வராததால், த.வெ.க., அணிக்கு செல்ல ஸ்ரீ காந்தி முயற்சிப்பதாகவும், அதனால்தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என பேசியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு, ஆட்சியில் பங்கு கொடுப்போம் என, த.வெ.க., மட்டுமே அறிவித்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, பா.ம.க., ராமதாஸ் தரப்பு த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதை ஸ்ரீ காந்தி வாயிலாக சொல்ல வைத்திருக்கிறது.

