டவுட் தனபாலு: 'தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்'னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க!
டவுட் தனபாலு: 'தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்'னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க!
ADDED : பிப் 01, 2024 03:19 AM

தமிழக காங்., தலைவர் அழகிரி:
'சீட்' வாங்குவதற்காகவே நாங்கள் கட்சி நடத்துவதாகவும், தனிப்பட்ட நபர்களுக்கு தொகுதிகள் கேட்பதாகவும், அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். அது, தி.மு.க., விதிகளுக்கு முரணானது; தவறானது. அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என, தி.மு.க., தலைமை சொல்ல வேண்டும்.
டவுட் தனபாலு:
இப்ப தானே ராஜ கண்ணப்பன் ஆரம்பிச்சு வச்சிருக்காரு... இன்னும் போக போக, பலரும் பொளந்து கட்டுவாங்க பாருங்க... 'இந்த தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்'னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
--
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி:
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அ.தி.மு.க., துவக்கி விட்டது.தேர்தல் தொடர்பாக, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.
டவுட் தனபாலு:
நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள்ளேயே பயணிக்கிற மாதிரி, அந்த நாலு குழுக்களும் ரகசியமா ஆலோசனை நடத்துகிறதா என்ன...? கூட்டணிக்கு எந்த கட்சியும் வராத சூழல்ல, எத்தனை குழுக்கள் போட்டு என்ன புண்ணியம் என்ற, 'டவுட்' எழுதே!
--
தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு:
புயல், வெள்ளத்தால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். ஆனாலும், நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஜனவரி 27க்குள், நிவாரண நிதி தருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிதியை தர வேண்டும். இதை வைத்து, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூற முடியாது.
டவுட் தனபாலு:-
எப்பவும் மத்திய அரசு மீது ஆவேசமா குற்றம் சாட்டுற நீங்க, அடக்கி வாசிக்குறீங்களே... கேட்ட நிதி கிடைக்கணும்கிற எண்ணமா அல்லது தேர்தலின் போது, ஒட்டுமொத்தமா திட்டி தீர்த்துக்கலாம்னு அடக்கி வாசிக்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே!