மின்வாரிய கடன் உயர்ந்தது ஏன்? மத்திய அமைச்சர் விசாரணை
மின்வாரிய கடன் உயர்ந்தது ஏன்? மத்திய அமைச்சர் விசாரணை
ADDED : அக் 29, 2024 09:36 PM
சென்னை:தமிழக அரசிடம் மானியம் வாங்குவதை குறைக்குமாறு, மின் வாரிய அதிகாரிகளை, மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களின் நிலை குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் மற்றும் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், கடந்த சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது, மின் வாரியம், தமிழக அரசிடம் இருந்து மானியம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மனோகர் லால் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூட்டத்தில், மின் வாரியத்தின் நிதி நிலைமை பற்றி விரிவாக கேட்டறிந்த மத்திய அமைச்சர் மனோகர் லால், இவ்வளவு கடன் அதிகரிக்க என்ன காரணம் என்றும் வினவினார். இலவசம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும், 18,000 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு தொகையை மாநில அரசிடம் இருந்து மானியமாக பெறுவது ஏன் என்றும் கேட்டார். மானியம் பெறும் தொகையை குறைப்பதுடன், ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பையும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.