9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன்?: அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி
9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன்?: அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஆக 31, 2025 03:29 AM

சென்னை: 'தமிழகத்தில், 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து, விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, ஹிந்து அறநிலைய துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ், 2023ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய, சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இணையதளம் அப்போது, அறநிலைய துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தணிக்கை அறிக்கைகளை, அந்தந்த கோவில்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு டிச., 19ல் அறநிலைய துறை கமிஷனர், அனைத்து கோவிலின் இணை, உதவி கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
''கமிஷனர் உத்தரவின்படி, எத்தனை பேர் தணிக்கை அறிக்கைகளை கோவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் யார் யார் உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதை கண்டறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவில் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கடந்த ஆண்டு அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அதை, இதுவரை அமல்படுத்தாதது ஏன்? அறநிலைய துறை இணை, துணை, உதவி கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
இது குறித்து, 2023 மார்ச் 3ல் தலைமை தணிக்கை இயக்குனர், அறநிலைய துறை கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அறிக்கை தணிக்கைக்காக கோவில்களின் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காதது ஏன்? அவ்வாறு தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன என்பதை, அறநிலைய துறை கமிஷனர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பழனி, திருச்செந்துார் போன்ற, 50 பெரிய கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். அந்த விபரங்களை விரைந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன; இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது; எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளன.
எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறித்த விபரங்களுடன் விரிவான அறிக்கையை,அறநிலைய துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, செப்., 18க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

