இது உங்கள் இடம்: உண்மையை சுட்டிக்காட்டும் 'தினமலர்' மீது பாய்வது ஏன்?
இது உங்கள் இடம்: உண்மையை சுட்டிக்காட்டும் 'தினமலர்' மீது பாய்வது ஏன்?
ADDED : பிப் 19, 2024 03:57 AM

ரா.செந்தில் முருகன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., 'தினமலர்' நாளிதழ் குறித்த விமர்சனத்தை, அப்படியே வெளியிட்டு, 'தினமலர்' நாளிதழ் தன் நடுநிலையை நிரூபித்துள்ளது. ஆனால், தி.மு.க.,வினருடன் திரைமறைவு தொடர்பு வைத்திருப்பவர்களை, கட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதா இருந்த பதவியில் இருக்கும் இ.பி.எஸ்., செயல்பாடு எப்படி இருக்கிறது?
சட்டசபை தேர்தலின் போது, சென்னை, திருவல்லிக்கேணியில், உதயநிதியை எதிர்த்து போட்டியிட, நடிகை குஷ்பு பா.ஜ.,வில் சீட் கேட்டார்; அதை பா.ஜ.,விற்கு கொடுக்காமல், தொகுதியை கேட்காத பா.ம.க.,வுக்கு கொடுத்து, உதயநிதிக்கு சுலப வெற்றியை அளித்ததுடன், அவர் மாநிலம் முழுதும் சூறாவளியாக சுற்றி பிரசாரம் செய்ய மறைமுகமாக உதவியது யார்?
பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்தி நெருக்கடி கொடுக்காமல், அப்போது வலுவில்லாத பா.ஜ.,விடம் தள்ளிவிட்டு, அவர்களுக்கு சுலப வெற்றியை பரிசளித்தது ஏன் என்று இ.பி.எஸ்., விளக்க வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த, கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில், பெயரளவிற்கு கூட போராடாமல், 100 சதவீத வெற்றியை தி.மு.க.,விற்கு அள்ளிக் கொடுத்ததன் பின்னணியை இ.பி.எஸ்., விளக்க வேண்டும்.
அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஒரு பேட்டியில், 'லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, அ.தி.மு.க., மீது ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட வேண்டாம் என்று, வாய்மொழி உத்தரவு ஆளுங்கட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை இல்லை' என்கிறார். இது என்ன, 'டீலிங்?'
இவற்றையெல்லாம் விட, சட்டசபையில் ஆளும் தி.மு.க.,வை மயிலிறகால் வருடுவது போல இ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பேசுவதும், ஸ்டாலின் பெரிய மனதுடன் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்குவதும் எப்படி நடக்கிறது.
தி.மு.க., எதிர்ப்பில் தான் அ.தி.மு.க.,வின் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், தி.மு.க., உத்தரவுப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி, லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு சுலப வெற்றியை அளிப்பதன் பின்னணி என்ன?
ஆக, இ.பி.எஸ்.,சின் தலைமையில் அ.தி.மு.க.,வின் எதிர்காலம், 'பணால்' ஆகிறது. இதை சுட்டிக்காட்டும், 'தினமலர்' நாளிதழ் மீது அவர் பாய்கிறார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தக்க சமயத்தில் பாடம் புகட்டுவர்.

