திருப்பதி லட்டில் திண்டுக்கல் கலப்பட நெய் தமிழக அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏன் பா.ம.க., பொருளாளர் கேள்வி
திருப்பதி லட்டில் திண்டுக்கல் கலப்பட நெய் தமிழக அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏன் பா.ம.க., பொருளாளர் கேள்வி
ADDED : செப் 28, 2024 02:34 AM
திண்டுக்கல், செப். 28 -
''திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் நிறுவனம் தொடர்பாக தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்,'' என, திண்டுக்கல்லில் பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் மாட்டுக் கொழுப்பா, பன்றிக்கொழுப்பா என்பதல்ல விஷயம்.
ஒரு மண்ணில் ஒரு சமுதாயத்தின், ஒரு மதத்தின் நம்பிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை குலைத்துப்போட்டிருக்கிறது கலப்பட நெய் விவகாரம்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்த கலப்பட நெய்யை வழங்கியது திண்டுக்கல் மாவட்ட பால் நிறுவனம்.
தரமற்ற கலப்படமான நெய் விநியோகத்தால் வியாபார நேர்மையின்மை வெளிப்படையாகி இருக்கிறது.
தி.மு.க.,வின் மேல் சந்தேகப்பட வலுவான முகாந்திரமும் இருக்கிறது. இதுவரை தமிழக அரசு வாய்திறக்காமல் இருப்பதே போதுமான காரணமாக இருக்கிறது.
இன்று வரை தமிழக அரசு அந்த நிறுவனத்தில் உண்மைத்தன்மை அறிய எந்தவித சோதனையும் நடத்தவில்லை.
உணவுப்பொருட்களில் கலப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.