ADDED : ஏப் 13, 2025 04:52 AM

சென்னை: தமிழகத்தில் மாதத்திற்கு சராசரியாக, 40,000 - 50,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டில், 1.79 லட்சம் கார்டுகள் தான் வழங்கப்பட்டுள்ளன.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2023 செப்டம்பரில் தமிழக அரசு துவக்கியது. இத்திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்யும்போது, முகவரி ஆவணமாக, அவர்களின் ரேஷன் கார்டுகள் கேட்கப்பட்டன.
இதனால், பலரும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அவர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு கொடுத்தால், மாதம் 1,000 ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதை தடுக்கும் வகையில், கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இதன் விளைவாக, 2022ல் மாதம் சராசரியாக, 40,000 - 50,000 ரேஷன் கார்டுகள் வழங்கிய நிலையில், கடந்த ஓராண்டு முழுதுமாகவே, 1.79 லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே குடும்பத்தில் வசித்து, புதிய கார்டுக்காக உரிய ஆவணம் இல்லாமல், தனி கார்டு கேட்கும் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன; தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது' என்றார்.