தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? கேள்வி கேட்கிறார் பழனிசாமி
தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? கேள்வி கேட்கிறார் பழனிசாமி
UPDATED : டிச 05, 2024 03:26 PM
ADDED : டிச 05, 2024 03:20 PM

சென்னை: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதில் தி.மு.க., அரசுக்கு என்ன பயம்?,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரிப்பதில் தி.மு.க., அரசுக்கு என்ன பயம்?
கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? சுப்ரீம் கோர்ட்டில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அ.தி.மு.க., தொடர்ந்து போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.