தமிழக மாணவர்களின் வெற்றி சிவில் சர்வீசஸ் தேர்வில் குறைவது ஏன்?
தமிழக மாணவர்களின் வெற்றி சிவில் சர்வீசஸ் தேர்வில் குறைவது ஏன்?
UPDATED : டிச 15, 2024 12:20 PM
ADDED : டிச 15, 2024 01:24 AM

'தினமலர்' நாளிதழ், வாஜிராம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் நடத்திய, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் வெற்றி குறைவது ஏன் என்பதற்கு, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி மற்றும் வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
![]() |
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை:
அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என்று அண்ணாமலை கூறினார்
“அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்,” என, தமிழக பா.ஜ., தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை கூறினார்.
'தினமலர்' நாளிதழும், 'வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன்' நிறுவனமும் இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தின.
அதில், 'அரசு பணி சாத்தியமே' என்ற தலைப்பில், அண்ணாமலை பேசியதாவது:தினமலர்' நடத்தும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, தமிழக அளவில் மிக முக்கியமானது. அரசு பணியில் சேர வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், நாட்டின் முன்னேற்றத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்த 25 ஆண்டுகள்
ஓர் இலக்கை அடைய வேண்டுமானால், அதற்கான முயற்சியை, ஒரு இடத்தில் துவங்க வேண்டும். 'தினமலர்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள், சிவில் சர்வீசஸ் முயற்சியை துவக்கி இருக்கின்றனர்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், மூன்று மாதம் படித்தபோது, அங்குள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் இந்தியாவின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கானது. இந்த காலகட்டத்தில் சீனா, ஜப்பானை போல, இந்தியாவும் வளரப் போகிறது.
வளரும் நாடு என்பதிலிருந்து, வளர்ச்சி அடைந்த நாடு என்ற மாற்றத்தில், இந்தியா அடியெடுத்து வைக்கும்போது, இன்றைய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர இருக்கின்றனர்; இதுவொரு அரிய வாய்ப்பு.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சர்வீசஸ் மீதான கனவு, இளைஞர்களுக்கு அழியாமல் இருந்து வருகிறது. இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வருகிறது; 4 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தொட்டிருக்கிறோம். மத்தியில் நிலையான ஆட்சி இருப்பதே இதற்கு காரணம். உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளன.
ஒரு காலத்தில், 'ஐ.ஏ.எஸ்., ஆகிவிட்டால் போதும்; 35 ஆண்டுகள் யாரும் கேள்வி கேட்க முடியாது' என்ற நிலை இருந்தது.
இப்போது சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், தினமும் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஏதாவது துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விருப்பு, வெறுப்பு
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள், முழுதுமாக நாட்டுக்கு தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். விருப்பு, வெறுப்பு என்பதே இருக்கக் கூடாது.
காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என, இந்தியாவின் எந்த பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். சொந்த மாநிலத்தில்தான் பணியாற்றுவேன் என்ற மனநிலையில் இருந்தால், தேர்வுக்கு தயாராவதிலேயே, 20 சதவீதம் அளவுக்கு தேக்க நிலை ஏற்படும்.
'எதையும் கிரகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டால், எதுவுமே சாத்தியமே' என ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளதை, அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு, தோல்வி என்பதே கிடையாது.
அறிவுத் திறன்
வென்றால் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள் கிடைக்கும். இல்லையெனில், பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எங்கேயும் கிடைக்காத அறிவுத் திறன், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும்போது கிடைக்கும். எனவே, கவலைப்படாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமா என்று பலரும் கேட்கின்றனர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், கண்டிப்பாக வெற்றி பெற முடியும். தன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், எதிலும் வெற்றி பெற முடியாது.
இந்த தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அதற்கு முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும். உறவினர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட செல்லாமல், முழு கவனமும் சிவில் சர்வீசஸ் தேர்வில் மட்டுமே இருக்க வேண்டும்.
எதற்கெல்லாம் மதிப்பெண் கிடைக்காதோ, அந்த விஷயங்களில் ஈடுபடவே கூடாது. 24 மணி நேரத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
அரசு பணிக்கு வந்து விட்டால், 35 ஆண்டுகள் என்ன செய்ய போகிறீர்களோ, அதைத்தான் தேர்வுக்கு தயாராகும்போது கற்றுக் கொள்கிறீர்கள். இதை புரிந்து படிக்க வேண்டும். எதிர்மறையாக சிந்திக்காமல், 'என்னால் முடியும்' என்று நம்புங்கள். இதையெல்லாம் செய்தால் அரசுப் பணி சாத்தியமே.
300க்கு 240
கடந்த 2008 நவ., 26ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தான், எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. லக்னோ ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்கும்போது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, ஐ.பி.எஸ்., ஆக தேர்வானேன்.
நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, வாஜிராம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குனர் ரவீந்திரன், எனக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தினார்.
'உங்களது உண்மையான இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள். நேர்முகத் தேர்வில், 300க்கு 210 மதிப்பெண் கிடைக்கும்' என்று, எனக்கு அறிவுரை வழங்கினார். அவரது இந்த சொற்கள், எனக்கு பெரும் ஊக்கமளித்தன. அதனால், 300க்கு 240 மதிப்பெண் பெற்று, ஐ.பி.எஸ்., தேர்வானேன்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் இயக்குனர் ரவீந்திரன்:
'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆக வேண்டுமானால் நாளிதழ்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்'
“சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற நாளிதழ்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்,” என, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., நிறுவனத்தின் இயக்குனர் ரவீந்திரன் கூறினார்.
'சிவில் சர்வீசஸ் தேர்வுகளும், சமீபத்திய மாற்றங்களும்' என்ற தலைப்பில், அவர் பேசியதாவது:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு திட்டமிடாமல் படிப்பது, முறைப்படி திட்டமிட்டு படிப்பது என, இரு வழிகளை பின்பற்றலாம். கல்லுாரியில் இளநிலை படிப்பவர்கள், முறைப்படி திட்டமிடாமல், கிடைக்கும் நேரங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்கலாம்.
பொது அறிவு கேள்வி
இந்த தேர்வு எழுதுபவர்கள், நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
நடப்பு நிகழ்வுகளில் இருந்துதான் பொது அறிவு கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகின்றன. நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஒரே வழி, நாளிதழ்களை படிப்பதுதான்.
எனவே, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்து விட்டால், தினசரி மூன்று நாளிதழ்களையாவது படிக்க வேண்டும்.
வெறுமனே நாளிதழ்களை வாசிக்காமல், பாடப் புத்தகங்களை படிப்பது போல ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து எழுதப்படும் கட்டுரைகள், பல்வேறு துறை நிபுணர்களின் சிறப்பு பேட்டிகளை ஆழ்ந்து படித்து, அதில் உள்ள விஷயங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய வேண்டும்; நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும்.
புதிய சிந்தனைகள்
அப்போதுதான் பல கேள்விகள் எழும்; அதற்கு பதிலை தேடித் தேடி பெறும்போது, அறிவுத் திறனும் மேம்படும்; புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் மாற்றங்கள், புதிய சவால்கள் வந்து கொண்டே இருக்கும். அனைத்தையும் எதிர்கொள்ள, மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கு உதவ, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் தயாராக உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையும் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி:
'சிவில் சர்வீசஸ் தேர்வில் தோற்றாலும் வாழ்வில் நீங்கள் வெற்றி பெறலாம்'
“சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதே, வாழ்வில் வெற்றியை தரும்,” என, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பேசினார்.
'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சியில், 'அரசு போட்டித் தேர்வுகளில் சாதிப்பது எப்படி?' என்ற தலைப்பில், ரவி பேசியதாவது:
நான் படிக்கும்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வயது உச்ச வரம்பு, 26 ஆக இருந்தது. நான், 26 வயதில் தேர்வுக்கு தயாராகி, நேர்முகத் தேர்வு வரை சென்றேன்; ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
வயது வரம்பை அதிகரிக்கக் கோரி, டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அன்றைய பிரதமர் வி.பி.சிங், 28 ஆக உயர்த்தினார். அப்போது எனக்கு 28 வயது, ஒரு மாதம் ஆகியிருந்தது; அதனால் எழுத முடியவில்லை.
ஆனால், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால், வயது வரம்பு ஓராண்டு மட்டும், 31 என உயர்த்தினர். அந்த வாய்ப்பை பயன்படுத்திதான், நான் ஐ.பி.எஸ்., ஆனேன்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று, அரசு பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற லட்சியம்தான் என் வெற்றிக்கு காரணம். முனைப்போடு, நம்பிக்கையோடு செயல்பட்டால், எந்த தேர்விலும் வெற்றி பெறலாம்.
வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினாலே, ஒருவரின் ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
எனவே, சிவில் சர்வீசஸ் தேர்வில் தோற்றாலும், வாழ்வில் வெற்றி பெற முடியும். நம்மால் வெற்றி பெற முடியாது என்ற நினைப்பே இருக்கக் கூடாது.
நாங்கள் படிக்கும்போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும். இப்போது எங்கும் புத்தகங்கள், கையேடுகள் பரந்து கிடக்கின்றன.
ஒரு பாடத்திற்கு, 50 புத்தகங்களை படிக்கக் கூடாது. சிறந்த புத்தகம், கையேடுகளை தேர்வு செய்து படித்தாலே வெற்றி கிடைக்கும்.
இத்தேர்வு எழுதுபவர்கள் எதையும் சுருக்கமாக, புரியும்படி தெளிவாக எவ்வளவு வார்த்தைகள் எழுத சொல்லியிருக்கின்றனரோ, அந்த அளவுக்குள் தான் எழுத வேண்டும்.
கடந்த கால வரலாறுகள் தான், நிகழ்கால வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே, எந்தவொரு பாடத்தையும், நடப்பு நிகழ்வுகளையும், வரலாற்று தகவல்களையும் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய வேண்டும்.
இத்தேர்வு எழுதுபவர்களுக்கு, இப்போது மொழி தடையாக இல்லை. ஆங்கிலத்தில் பெரிய புலமை தேவையில்லை. 12ம் வகுப்பு அளவில் தான் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். அதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். நம் தாய்மொழியிலேயே தேர்வு எழுத முடியும்.
மேலும், உடலும், மனதும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு தினசரி, 45 நிமிடங்கள் உடற்பயிற்சியும், 10 நிமிடங்கள் தியானமும் அவசியம்.
தினமும் குறிப்பிட்ட நிமிடங்கள் தியானம் செய்தால், மனதில் அமைதி பிறக்கும். படிப்பது அனைத்தும், மனதில் பதிந்து விடும். ஒன்றும் தெரியாதது போல இருக்கும். ஆனால், தேர்வு எழுத உட்கார்ந்ததும், பதில் வந்து விடும்.
இந்த தேர்வில் வென்று அரசு பணியில் இருப்பவர்களுக்கு, அரசியலமைப்பு சட்டம் தான் மாஸ்டர். சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் செய்ய வேண்டும்; சட்டத்தை தவிர, வேறு யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் என்பது வழிகாட்டியாக இருக்கும். எனவே, விரும்பும் பயிற்சி மையத்தில் இணைந்து படிக்கலாம்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை, பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஓரிரு முறை தோல்வி அடைந்தாலும், அவர்களிடம் எதிர்மறையாக பேசக் கூடாது.
இவ்வாறு ரவி பேசினார்.
தமிழக மாணவர்கள் அறிவுத்திறனில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழக மாணவர்கள் முன்பு, ஏராளமான மாற்று வாய்ப்புகள் உள்ளன. உயர் கல்வியை முடித்து விட்டு, ஐ.டி., நிறுவனங்களில் சேரவும், சொந்தமாக தொழில் துவங்கவும், பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள், அவர்களுக்கு முதன்மையானதாக இல்லை. அதனால், சமீப ஆண்டுகளாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் சதவீதம் குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சி குறித்து மாணவர்கள், பெற்றோர் கருத்து
என் மகள் லக் ஷிதா, 11ம் வகுப்பு படிக்கிறார். எதிர்காலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அதற்கு எவ்வாறு தயாராவது, என்ன படிக்க வேண்டும் உள்ளிட்ட பல கேள்விகள் இருந்தன. சென்னையில் 'தினமலர்' நடத்திய இதுபோன்ற நிகழ்ச்சி வாயிலாக, அதற்கான ஆலோசனைகள் கிடைத்துள்ளன. முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள், உத்வேகத்தை தந்துள்ளன. அவற்றை பின்பற்றி, எங்கள் மகளை ஐ.ஏ.எஸ்., ஆக்குவோம்.
- உமா சங்கர், 42, வளசரவாக்கம், சென்னை.
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவது, என் நீண்ட நாள் கனவு, தேர்வுக்கு எவ்வாறு படிக்க துவங்குவது என்ற கேள்வியும், சிறிய பயமும் இருந்தது. ஆனால், 'தினமலர்' நடத்திய இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்கள், என் சந்தேகத்தை போக்கின. சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவது குறித்து, எனக்கு தெளிவான ஐடியா கிடைத்துள்ளது.
ராகுல், 21, மாணவர், சென்னை
என் மகள் பாவனா, 10ம் வகுப்பு படிக்கிறார். அவர் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டுமென விருப்பப்படுவதால், 'தினமலர்' நடத்திய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோம். 'தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் தயாராக வேண்டும். முழு கவனமும் தேர்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும். தோல்வி என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது' என முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை வழங்கிய அறிவுரைகள் பயனுள்ளதாக இருந்தன.
கண்ணபிரான், , 44.. திருவள்ளூர்.
தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பயிற்சி மையங்களும், பள்ளி, கல்லுாரிகளும் நடத்தி பார்த்துள்ளோம். முதல்முறையாக, 'தினமலர்' போன்ற பெரிய நாளிதழ் நடத்தியது வரவேற்கத்தக்கது. தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கிடைத்துள்ளது. அதிலும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
பிரதீபா, 21, மாணவி, வேளச்சேரி.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதில் செய்தித்தாள் படிப்பது முக்கியம் வாய்ந்தது. 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும்போதே, மாணவர்கள் நாளிதழ்கள் படிக்க வேண்டும். நாளிதழ்கள் படிப்பது, தேர்வின் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என அனைத்து நிலைகளிலும் உதவும் என்பன போன்ற கவல்கள் பயனுள்ளதாக இருந்தன.
ராதிகா, 38, செம்பாக்கம்.
தினமலரின் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி வானளாவிய அதிகாரம் பெற்றாலும், நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து, நேர்மையாகவும், பொது மக்களுக்கு சேவை புரிவதை கடமையாகவும் கொண்டு செயல்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்ற அறிவுரை, பயனுள்ளதாக இருந்தது.
அக் ஷயா, 16, திருவள்ளூர்.