கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும் மரத்தடியில் வகுப்பறை நடப்பது ஏன்?
கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும் மரத்தடியில் வகுப்பறை நடப்பது ஏன்?
ADDED : மார் 30, 2025 12:35 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மண மேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வந்தனர்.
பொன்னகரம் மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தொடக்கப்பள்ளியை 2017ல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது.
இதுவரை தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படவில்லை.
பொன்னகரம் மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் உள்ள கட்டடத்தை சில ஆண்டுகளுக்கு முன் கட்டினர்.
மேலும் கட்டடம் கட்ட நிதி பற்றாக்குறையால், மாணவர்களின் நலன் கருதி கட்டடத்திற்கு முன் தகர சீட்டுகள் கொண்ட ஒரு ஷெட் அமைத்து தந்தனர்.
தொடர்ந்து, வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். இது தொடர்பாக, அறந்தாங்கி காங்., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது வரை எந்தவொரு புதிய கட்டடமும் கட்டப்படவில்லை.
தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் மரத்தடி வகுப்பறைகள் செயல்படுவது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.