அரசு டாக்டர் மீது ஏன் வழக்கு இல்லை? போலீசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அரசு டாக்டர் மீது ஏன் வழக்கு இல்லை? போலீசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : டிச 18, 2024 09:07 AM
சென்னை: சென்னை கிண்டி கருணாநிதி நுாற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைமை டாக்டராக பணியாற்றி வரும் பாலாஜியை, நவம்பர், 13ல், அவரது அறையில் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த டாக்டர் பாலாஜி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ், கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஜாமின் கேட்டு விக்னேஷ் தாக்கல் செய்த மனுவை, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'பணியில் இருந்த டாக்டரை கத்தியால் குத்தியதால், மனுதாரருக்கு ஜாமின் வழங்கக்கூடாது' என, போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக டாக்டர் நடந்ததால், ஆத்திரத்தில் குத்தி விட்டதாக தெரிவிக்கப் பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'டாக்டரை கத்தியால் தாக்கியதாக, மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரிய சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக நடந்ததாக கூறப்படும் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?' என்று, கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில், தினமும் மனுதாரர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.