கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி
கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி
ADDED : மார் 30, 2025 04:21 AM

அருப்புக்கோட்டை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து, நேற்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மொத்தம் 1,170 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் ஊராட்சி அலுவலகம் முன், வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் முடியும் நேரத்தில், பாலவநத்தத்தைச் சேர்ந்த வடக்கு ஒன்றிய பா.ஜ., துணைத் தலைவர் மீனா, அமைச்சரிடம், 'இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அறிவிக்கப்பட்டதை ஏன் ஆர்ப்பாட்டமாக நடத்துறீங்க?' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர், ''கிராம சபை கூட்டம் 11:00 மணிக்கு மேல் தான் நடக்கும்,'' என கூறிவிட்டு சென்றார். அங்கிருந்த பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன், '100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது' என, உரத்த குரல் எழுப்பினார்.
போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.