ADDED : ஜன 15, 2024 01:13 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கடவுள் இல்லை' என்ற ஈ.வெ.ரா., கொள்கையை வீதி வீதியாக, மேடைதோறும் முழங்கி, ஆட்சியை பிடித்த தி.மு.க.,வுக்கு எதிராக, குறிப்பாக, திராவிட கொள்கைக்கு எதிராக, அண்ணாமலையால் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது.
அதனால், திராவிட கொள்கையை கொஞ்சம் தள்ளி வைத்து, 'ஆன்மிக ஆட்சி செய்கிறோம்' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டென, 'டிராக்' மாறுகிறார். 'சித்தர்கள், சான்றோர், ஆன்றோருக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கிற ஆன்மிக ஆட்சி, இப்போது தமிழகத்தில் நடக்கிறது' என, புளகாங்கிதம் அடைந்து உள்ளார் சேகர்பாபு.
ஆன்மிகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது. தி.மு.க.,வின் திராவிட கொள்கைக்கும், ஆன்மிகத்திற்கு அதிக துாரம். ஆன்மிக ஆட்சி என்றால், எல்லா மதமும் சரிசமம் என்று தானே அர்த்தம். அப்படியெனில், கீழ்கண்ட கேள்விகளுக்கு சேகர்பாபு பதிலளிப்பாரா?
தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் அறநிலையத் துறை ஏன்? பிற மதங்கள் ஆன்மிகம் அற்றவைகளா?
ஆன்மிக ஆட்சி என்ற பெயரில், சிதம்பரம் போன்ற ஹிந்து கோவில் ஆகம விதிகளில் அறநிலையத் துறை தலையிடுவது
விஷேச நாட்களில் கடவுளை தரிசிக்க அதிகமான கட்டணம் பிடுங்குவது
பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது
கோவில் வளாகத்தில் கடைகள் அமைத்து, தனி நபர்கள் கொள்ளையடிக்க வழிவகுத்து கொடுப்பது
கோவில் வருமானத்தை எடுத்து, ஆட்சியாளர்கள் சொகுசாக செலவிடுவது, போன்றவை தான் ஆன்மிக ஆட்சியா?
தமிழகத்தில் பா.ஜ., விஸ்வரூபமாக வளர்ந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்து வருவதால், ஆன்மிக ஆட்சி என்ற போர்வையா?
ஒன்று மட்டும் உறுதி... நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும், ஹிந்து விரோத கட்சி தி.மு.க., என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பா.ஜ., தலைமையில், தமிழகத்திலும் ஹிந்துக்கள் போற்றக்கூடிய ஒரு ஆட்சி அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை.