'செமி கண்டக்டர்' தயாரிப்பு நிறுவனங்களை ஏன் தமிழகம் அழைத்து வரவில்லை: சம்பத்
'செமி கண்டக்டர்' தயாரிப்பு நிறுவனங்களை ஏன் தமிழகம் அழைத்து வரவில்லை: சம்பத்
ADDED : செப் 25, 2024 09:16 PM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிக்கை:
தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக, தி.மு.க., அரசு கூறுகிறது. அப்படியென்றால் எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு முதலீட்டில், எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகள் துவக்கி உள்ளன; எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது போன்ற விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை.
'செமி கண்டக்டர்' தயாரிக்கும் நிறுவனங்களை, ஏன் இதுவரை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்து வரவில்லை. தி.மு.க., அரசு துாங்கிக் கொண்டிருந்ததால், தமிழகத்தில் முதலீடு செய்ய இருந்த, செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், குஜராத்தில் தொழிற்சாலையை துவக்கி உள்ளது.
தற்போது மீண்டும் செமி கண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்க, தி.மு.க., அரசு அழைப்பு விடுத்துள்ளதாக கூறுவது, தும்பை விட்டு வாலை பிடிப்பதாகும்.
'காட்பரிஸ்' பன்னாட்டு மிட்டாய் நிறுவனம், தமிழகத்தில் தொழில் துவங்க முயற்சி செய்தது. ஆனால், தி.மு.க., அரசு ஆதரவு இல்லை. இந்நிலையில், ஸ்ரீசிட்டியில் தொழிற்சாலையை துவக்கியது.
வெளிநாடுகளில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக, அமைச்சர் ராஜா வெளியிட்ட புள்ளிவிபரங்கள் இல்லாத, வெற்று தகவல்கள் அடங்கிய பதிலை, வெள்ளை அறிக்கை என முதல்வர் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார். இனியும் முதல்வரோ, அமைச்சர் ராஜாவோ விதண்டவாதம் பேசாமல், ஈர்த்த முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இல்லையெனில் 2026ல் நாங்கள் வெளியிடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***