ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?: சத்யபிரதா சாஹூ புது விளக்கம்
ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?: சத்யபிரதா சாஹூ புது விளக்கம்
ADDED : ஏப் 22, 2024 01:22 PM

சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது. இந்த குளறுபடிக்கு, 'ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஒருசிலரே செயலியில் பதிவிட்டதே காரணம்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கமளித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முதலில் 72 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் 69.46 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் அடங்குவதற்குள் நேற்று (ஏப்.,21) மதியம், 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக 3வது முறையாக மாற்றி அறிவித்தனர். தேர்தல் ஓட்டுப்பதிவில் இவ்வளவு குளறுபடிக்கு நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம். இவ்வாறு சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.

