UPDATED : ஜன 20, 2024 05:14 AM
ADDED : ஜன 19, 2024 11:23 PM

மதுரை:'பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து கணவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதை தகவல் உரிமைச் சட்டம் மூலம் அறிய, மனைவிக்கு உரிமை உண்டு' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கணவர் ஒருவர் பல்கலை ஒன்றில் பணிபுரிகிறார். இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமண விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கணவரிடம் மனைவி பராமரிப்புத் தொகை கோரினார்.
இதற்காக கணவரின் பணி தொடர்பான விபரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், பல்கலை நிர்வாகத்திடம் மனைவி கோரினார். கணவர் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் மனைவி கோரிய தகவலை பல்கலை நிர்வாகம் அளிக்கவில்லை.
சென்னையிலுள்ள மாநில தகவல் ஆணையத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். அங்கு, மனைவி கோரிய தகவல்களை அளிக்க உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:
மாநில தகவல் ஆணையம், தகுந்த உத்தரவு பிறப்பித்ததில் திருப்தி அடைகிறேன்.
கணவன், மனைவி இடையே திருமணம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மனைவிக்கு சில அடிப்படை விபரங்கள் தேவைப்படுகின்றன.
மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையானது மனுதாரர் பெறும் சம்பளத்தைப் பொருத்தது. மனுதாரரின் சம்பள விபரம் தெரியாவிடில், மனைவி தன் சட்டப்பூர்வ உரிமையை கோர முடியாது.
கணவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதை அறிய, மனைவிக்கு உரிமை உண்டு. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.