ADDED : பிப் 05, 2026 03:28 AM

துாத்துக்குடி: முன்னாள் முதல்வரும் அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், திருச்செந்துார் முருகன் கோவிலில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, இன்று மவுன விரதத்துடன் யாகம் நடத்த இருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் கூறினர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று துாத்துக்குடி வந்த தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு, முருகன், வள்ளி, தெய்வானை, சண்முகர், பெருமாள், தெட்சிணாமூர்த்தி, சம்ஹாரமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களையும் வழிபட்டார். கோவில் விடுதியில் தங்கியிருக்கும் அவர், இன்று மவுன விரதம் இருக்கப் போவதாகவும், சத்ரு சம்ஹார யாகம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுப்பேன். அதற்கு முன் முருகனை வழிபட திருச்செந்தூருக்கு வந்தேன். உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். நாளை என்ன நடக்கும் என எதுவும் தெரியாது. அதனால், நாளை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

