தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா? *உதயநிதி அதிரடி திட்டம்
தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா? *உதயநிதி அதிரடி திட்டம்
ADDED : ஜன 23, 2025 07:18 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளை பெற, துணை முதல்வர் உதயநிதி தரப்பில் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வும், மூத்த தலைவருமான இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அத்தொகுதிக்கு பிப்., 5 இடைத்தேர்தல் நடக்க உள்ளது. பிப்., 8 ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க., -பா.ஜ., - தே.மு.தி.க.,- த.வெ.க., போன்றவை, இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
இதனால், ஆளும் கட்சியான தி.மு.க.,வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈ.வெ.ராமசாமிக்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'திராவிடமா, தமிழ் தேசியமா', 'பெரியார் புரணமா, பெரிய புரணமா' என்ற பாணியில், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார். ஈ.வெ.ராமசாமி எதிர்ப்பு கொள்கையை, சீமான் கையில் எடுத்துள்ளதால், அவரது கட்சிக்கு பா.ஜ., ஓட்டுகள் மொத்தமாக விழ வாய்ப்பு உள்ளது.
இதனால், தி.மு.க., தரப்பு எதிர்பார்த்த ஓட்டுக்களில் ஓட்டை விழும் என தி.மு.க., தரப்பில் அச்சம் கொள்ளத் துவங்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று விட வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி திட்டமிடப்பட்டுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, பதிவான ஓட்டுகளில் 65 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. இந்த இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவதால், 80 சதவீதம் ஓட்டுகளை அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில், பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், ஆளும்கட்சி தரப்பில் அமைச்சர்கள் பட்டாளத்தை, தேர்தல் பணிகளில் ஈடுப்படுத்த, முதல்வர் விரும்பவில்லை.
அவரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் சிலர் மட்டும், கடைசி 3 நாட்கள் பிரசாரம் செய்யலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் அளவுக்கான ஓட்டுகளைப் பெற அதுவே போதுமானது எனவும் நம்புகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

