நீதிமன்ற வழக்கு தாக்கலில் இ-பைலிங் மேம்படுத்தப்படுமா
நீதிமன்ற வழக்கு தாக்கலில் இ-பைலிங் மேம்படுத்தப்படுமா
ADDED : ஜன 16, 2024 02:00 AM

மதுரை: நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்கள் தாக்கலுக்கான இ-பைலிங் முறையை மேம்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள், எழுத்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீதிமன்றங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்னணு முறையில் வழக்கு ஆவணங்கள் தாக்கல் ( இ-பைலிங் ) 2023 செப்.,1 முதல் துவங்கியது. சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை, மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட வழக்குகள் மட்டுமே தற்போது இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளது.
இதில் உள்ள நடைமுறை சிரமங்கள், தீர்வுகள்குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் (எம்.எம்.பி.ஏ.,) சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசராகவன் கூறியதாவது:
இ-பைலிங் முறையை செயல்படுத்த மகாராஷ்டிரா பார்கவுன்சில் அம்மாநிலத்திலுள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் ரூபாயில் கம்ப்யூட்டர், ஸ்கேனர் கருவிகளை இலவசமாக வழங்கியுள்ளன. அதுபோல் தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தமிழகத்திலுள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கலாம்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற வளாகத்தில் இலவச'வைபை' இணைப்பு வசதி உள்ளது. அதுபோல் சென்னை உயர்நீதிமன்றம்மற்றும் மதுரைக் கிளையில் வைபை வசதி செய்யலாம்.
எம்.எம்.பி.ஏ.,சங்கத்தில் இ-பைலிங் மையம் துவக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒவ்வொரு வழக்கறிஞர் சங்கத்திலும் துவக்கலாம். நீதிமன்றங்களில் குறிப்பாக மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் தடையின்றி அதிவேக இணையதள வசதி செய்ய வேண்டும்.
காகிதம் மூலம் மனு தாக்கல் செய்யும்போது அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நீதிமன்ற நிர்வாகம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பும். அதை நேரடியாக பார்த்து நிவர்த்தி செய்து எங்களின் எழுத்தர்கள் மூலம் மீண்டும் தாக்கல் செய்வோம். ஆனால் இ-பைலிங் முறையில் அந்நடைமுறை இல்லை. அதற்குரிய வசதியை செய்யவேண்டும்.
இ-பைலிங்கில் தற்போதுள்ள 3:0 மென்பொருளை மேம்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களின் எழுத்தர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்குஉரிய எழுத்தர்கள் சங்க செயலாளர் ராமசாமி: இ-பைலிங் தாக்கலில் நடைமுறைச் சிரமங்கள் குறித்து நீதிமன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளனர். இ-பைலிங் முறை முழுமையாக நடைமுறைக்கு வரும்வரை காகிதங்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்வதையும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.