காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகுமா? விரல் ரேகை பதிவு குறித்து அதிகாரி விளக்கம்
காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகுமா? விரல் ரேகை பதிவு குறித்து அதிகாரி விளக்கம்
ADDED : நவ 01, 2025 09:02 PM
சென்னை: வீட்டு சமையல் காஸ் வாடிக்கையாளர்கள், ஏஜென்சிகளில் விரல் ரேகை பதிவு செய்து, உண்மைத் தன்மை சரிர்பார்க்கும் பணியை முடிக்காவிட்டாலும், 'சிலிண்டர் சப்ளை' பாதிக்கப்படாது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்கின்றன.
அந்நிறுவனங்கள், மாதந்தோறும் நிர்ணயிக்கும் விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படுகிறது.
மொபைல் செயலி தமிழகத்தில், பிரதமரின் இலவச காஸ் திட்ட பயனாளிகள், 40 லட்சம் பேர் உட்பட மொத்தம், 2.35 கோடி வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மானிய தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு பயனாளியின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் பணி, கடந்த ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.
அதன்படி, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் காஸ் ஏஜென்சிக்கு சென்று, அங்குள்ள கருவியில் விரல் ரேகை, விழி ரேகை, முகப்பதிவு என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, உண்மை சரிபார்ப்பு பணியை செய்ய வேண்டும்.
ஏஜென்சிக்கு செல்லாமல், எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலி வாயிலாகவும் செய்யலாம்.
இன்னும் ஒரு கோடிக்கும் அதிகமானோர், விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். இதனால், சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம், வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.
நிறுத்தப்படாது
இதுகுறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதமரின் இலவச திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்களுக்கு தலா, 300 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அவர்கள் ஆண்டுதோறும் கட்டாயம் விரல்ரேகை பதிவு செய்து, உண்மை சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
இல்லையெனில், ஏழு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். எட்டாவது, ஒன்பதாவது சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படாது. அதேசமயம், சிலிண்டர் தொடர்ந்து வழங்கப்படும்.
மற்ற வாடிக்கையாளர்களும் விரல் ரேகை பதிவு செய்து, உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான மானியம் நிறுத்தப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

