மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவாரா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவாரா?
ADDED : ஜன 20, 2024 08:10 AM

மதுரை: அயோத்தியில் ஜன., 22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு இன்று, ஜன.,20ல் வருகிறார்.
நாளை மதுரை வழியாக டில்லி செல்கிறார். மதுரை வரும்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் ராமருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தொடர்பு உண்டு என்கின்றனர் கோயில் பட்டர்கள்.
கோயில் பட்டர்கள் ராஜா மற்றும் செந்தில் கூறியதாவது: சொக்கநாதர் லீலைகளில் மாயபசுவை வதைத்த படலம் என்ற லீலை உண்டு. சேர, சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை அபகரிக்க நாகபாம்பை அனுப்பியபோது சொக்கநாதர் அம்பு எய்தி முறியடித்த இடமே மதுரை நாகமலை. அடுத்ததாக யானையை அனுப்பிய போது மாரியம்மன் தெப்பக்குளம் கரையில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து நரசிம்ம பாணத்தை அனுப்பி முறியடித்த இடமே ஒத்தக்கடை யானைமலை. அதன் கீழ்தான் நரசிம்மர் கோயில் உள்ளது.
அனந்தகுண பாண்டியன் ஆட்சிசெய்தபோது மீண்டும் சேர, சோழ மன்னர்கள், மதுரையை அபகரிக்க தீயகுணம் கொண்ட பசுவை அனுப்பினர். அது பயிர்களை அழித்தது. மக்களும், மன்னரும் சுவாமியை வேண்டினர். அவர் தன் வாகனமான காளையை அனுப்பி முறியடித்தார். அந்த இடமே அழகர்மலை. இதற்கு 'ரிஷபகிரி' என்ற இன்னொரு பெயரும் உண்டு. ரிஷபம் என்பது காளையை குறிக்கும்.
சீதையை தேடி ராமரும், லட்சுமணனும் மதுரை வழியாக வந்தபோது இந்த மலை குறித்து அகத்தியரிடம் கேட்டு சுவாமியின் லீலைகளை அறிந்துக் கொண்டனர். பின், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் அம்மன், சுவாமியை தரிசித்தபோது 'சீதையை தேடி தென்கிழக்கு திசை நோக்கி செல்' என ஓர் அசரீரி ஒலித்தது.
அதன்படி, அவர்கள் ராமேஸ்வரம் நோக்கி சென்றபோது, எதிரே சீதையை சந்தித்துவிட்டு மோதிரத்துடன் ஆஞ்சநேயர் திரும்பி வந்தார். பின்னர் சீதையை மீட்டு லட்சுமணன், ஆஞ்சநேயருடன் அயோத்தி செல்வதற்கு முன் நான்கு பேரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசித்தனர். இதன் பிறகே ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இத்தகவல்கள் பரஞ்ஜோதி முனிவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. சீதை இருக்கும் இடம் தெரியாமல் தவித்த ராமருக்கு வழிகாட்டியது சொக்கநாதர் தான். அதன் காரணமாகத்தான், தம்பதி சமேதரராக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து ராமர், சீதை தரிசித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.