இது உங்கள் இடம்: பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?
இது உங்கள் இடம்: பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?
ADDED : பிப் 17, 2024 03:58 AM

கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய கடிதம்:
நடிகரும், தே.மு.தி.க., நிறுவன தலைவருமான விஜயகாந்த், கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவருக்கு, லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின், இவருக்கு தான் அதிக கூட்டம் திரண்டது.
திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அவருடைய குணநலன், உதவும் மனப்பான்மை, மனித நேயத்திற்காக தான் அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. அந்த கூட்டத்தில் அவருடைய கட்சி தொண்டர்கள், 20 சதவீதத்தினர் தான்; மீதி உள்ளோர் அவர் மீது அன்பு கொண்ட மற்றும் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களும், பொதுமக்களும் தான்.
தற்போது லோக்சபா தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க., பொதுச் செயலரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா கூட்டணி சம்பந்தமாக பேசி வருகிறார்.
தங்களது கட்சிக்கு, 14 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் எந்தக் கட்சி கொடுக்கிறதோ, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று கூறி வருகிறார். இவர், விஜயகாந்த் இறப்பிற்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்து இவ்வாறு பேரம் பேசி வருகிறார்; அவருக்கு இன்னும் யதார்த்த நிலை புரியவில்லை.
தன்னை, ஏதோ ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவி என்றும் நினைக்கிறார். கடந்த காலங்களில், விஜயகாந்த் உயிரோடு இருந்தபோதே, அந்த கட்சி சந்தித்த தேர்தல்களில் பிரகாசிக்கவில்லை என்பதை உணர வேண்டும்.
மேலும், தன் கட்சியின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள, எந்தவித பேரமும் பேசாமல், நிபந்தனை விதிக்காமல், வலிமையான கூட்டணியில் சேர்ந்து, கிடைக்கும் தொகுதிகளை பெற்று தேர்தலை சந்தித்தால் அரசியலில் நிலைத்திருக்கலாம்.
அதை விடுத்து, கறாராக நடந்து கொண்டால், அடுத்த தேர்தலுக்குள் தே.மு.தி.க., காணாமல் போய் விடும் என்பதை பிரேமலதா உணர வேண்டும்.