ADDED : பிப் 05, 2025 10:08 PM
சென்னை:திருநெல்வேலி - கன்னியாகுமரி வரை, இரட்டை பாதை பணி நிறைவு செய்யப்பட்டு உள்ளதால், 'வந்தே பாரத்' உட்பட ஆறு ரயில்களை, நாகர்கோவிலில் இருந்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத் தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது:
சென்னை - கன்னியாகுமரி இரட்டை வழி பாதை திட்டத்தில், நிறைவாக திருநெல்வேலி - கன்னியாகுமரி பாதை பணிகள், சில மாதங்களுக்கு முன் முடிந்துள்ளன.
பயணியர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ரயில்கள் சேவை அதிகரிக்கப்படவில்லை.
மேலும், திருநெல்வேலி வரை இயக்கப்படும் ரயில்கள், நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படவில்லை.
குறைந்தபட்சமாக, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத், ஷாலிமர் - திருநெல்வேலி, மும்பை தாதர் - திருநெல்வேலி, மேற்கு வங்க மாநிலம் புருலியா - திருநெல்வேலி உட்பட ஆறு ரயில்களை, நாகர்கோவிலில் இருந்து இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.