சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
ADDED : ஜூன் 21, 2024 12:44 PM

சென்னை: சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுப்பேன் என உறுதியளிப்பதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்தான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளேன். கூடுதலாக 57 அரசு மருத்துவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சிகிச்சைக்கு தேவைப்படும் உயிர்காக்கும் மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
200 லிட்டர் மெத்தனால் சாராயம்
பாதிக்கப்பட்ட 164 நோயாளிகளில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர், 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை ஜூன் 19 இரவே சென்று பார்க்க சொல்லியிருந்தேன். நேற்றும் (ஜூன் 20) அமைச்சர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்த இந்த துயர சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2 நாளில் அறிக்கை
முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார், எஸ்.பி., மற்றும் மற்ற அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரிக்கவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாளில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு விழுப்புரத்தில் நடந்த கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டு, 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிவாரணம்
மெத்தனால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் ஆலைகளை தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும்.
ஓடி ஒளிபவன் அல்ல
நடைபெற்ற சம்பவத்திற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் பேசினார்கள். உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் இந்த பிரச்னையில் இருந்து ஓடி ஒளிபவன் அல்ல, பொறுப்புடன் பதிலளிப்பவன். அதனால் தான் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு, குற்றவாளிகளை கைது செய்த பிறகே பதிலளிக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் பற்றிய பட்டியல் என்னிடம் இருக்கிறது. அதை வைத்து அரசியல் பேச விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் விளக்கமளித்தார்.