இந்த சட்டசபை கூட்டத்தொடரிலாவது ஐந்தாம் காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை முதல்வர் அறிவிப்பாரா
இந்த சட்டசபை கூட்டத்தொடரிலாவது ஐந்தாம் காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை முதல்வர் அறிவிப்பாரா
ADDED : அக் 08, 2025 12:08 AM

மதுரை : தமிழக போலீஸ் துறையின் சீர்த்திருத்தம் குறித்த ஐந்தாம் காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா என போலீசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போலீஸ் துறையின் சீர்த்திருத்தம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 2022 பிப்.,16ல் ஓய்வு நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளை செய்து இறுதியாக 61 தலைப்புகளில் போலீஸ் துறையில் செய்ய வேண்டிய பரிந்துரைகளை கடந்த ஜன.3ல் முதல்வர் ஸ்டாலினிடம் ஆணையம் சமர்ப்பித்தது.
அதில் அடிப்படை சம்பளம் ரூ.21,700 - ரூ.69,100 வரை, பதவி உயர்வு வாய்ப்பு குறைவாக உள்ள சிறப்பு பிரிவுகளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு படி பதவி உயர்வு, போலீஸ் தேர்வில் அடிப்படை கணினி தேர்வு, புதிதாக பணியில் சேருபவர்களுக்கு கட்டாய இலகுரக வாகனம் ஓட்டும் உரிமம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் பிரிவுகளில் காலி பணியிடங்கள் இருக்கக்கூடாது. அலைபேசியில் படம், வீடியோ எடுக்க போலீசாருக்கு ரூ.500 படி வழங்க வேண்டும். மாவட்டங்களில் பி.ஆர்.ஓ.,வாக இன்ஸ்பெக்டர் நியமனம், எஸ்.பி., அலுவலகங்களில் சமூகவலைத்தளங்களை கண்காணிக்கும் பிரிவு உருவாக்க வேண்டும். போலீஸ் பற்றாக்குறையை களைய வேண்டும் என போலீஸ் துறையை சீர்த்திருத்தக்கூடிய பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
இதில் பெண்களை பாதுகாக்க பிங்க் நிற வாகன ரோந்து உள்ளிட்ட சிலவற்றை மட்டும் அரசு செயல்படுத்தியது. மற்ற பரிந்துரைகளை கண்டுகொள்ளவில்லை. இந்தாண்டில் நடந்த இரு சட்டசபை கூட்டத்தொடரிலாவது முதல்வர் இதுகுறித்து அறிவிப்பார் என போலீசார் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அக்.,14ல் மீண்டும் சட்டசபை கூடுகிறது. இதிலாவது முதல்வர் அறிவிப்பாரா என போலீசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அக்.,14ல் துவங்கும் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. போலீஸ் துறையை கவனிக்கும் முதல்வர், இம்முறை நிச்சயம் சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பரிந்துரைகளை அறிவிப்பார் என காத்திருக்கிறோம்'' என்றனர்.