திமுக கூட்டணியில் இருந்து விலகுமா இந்திய தேசிய லீக்?
திமுக கூட்டணியில் இருந்து விலகுமா இந்திய தேசிய லீக்?
UPDATED : பிப் 05, 2024 10:31 AM
ADDED : பிப் 05, 2024 10:26 AM

மதுரை: வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேச நலன், சமுதாய நலன் கருதி கட்சியின் உயர்மட்ட குழுவில் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படுமென இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது கூறினார்.
இந்திய தேசிய லீக் சார்பில் பார்லிமென்ட் தேர்தலில் மயிலாடுதுறை, வேலூர், மத்திய சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தொகுதிகளில் போட்டியிட இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர்.
மதுரை வந்த தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது கூறுகையில், 'அதிமுகவிலிருந்து தொடர்ந்து அழைப்பு வரும் நிலையில் உரிய அங்கீகாரம் வழங்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் சிம்மக்கல் சித்திக் வலியுறுத்தினார். உடன் மாநில பொருளாளர் குத்தூஸ் மற்றும் மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜஹாங்கிர் இருந்தனர்.
இதற்கு தேசிய நலன், சமுதாய நலன் கருதி, வந்து கொண்டிருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலித்து, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்'' என பஷீர் அகமது கூறினார்.
தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்
2001 ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேசிய லீக் கட்சிக்கு 5 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 2019ல் பா.ஜ.,வுடன் இ.பி.எஸ் கூட்டணி வைத்ததால் தேசிய லீக் திமுகவுடன் கடந்த பார்லி., தேர்தல் 2021 சட்டசபை தேர்தல் என திமுகவுடன் கூட்டணி வைத்து வருகிறது. இருப்பினும் இந்த கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுகவில் வரும் பார்லி., தேர்தலில் தொகுதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் ஓட்டு
இதனால் பா.ஜ.,வை விட்டு விலகிய அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் என்றும், முஸ்லிம்கள் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கலாம், கொள்கை ரீதியாக நல்ல பலன் கிடைக்கும் என்றும் தேசியலீக் நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து தேசியலீக் வெளியேறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

