மதுரை - புனலுார் விரைவு ரயில் நாகையில் இருந்து இயக்கப்படுமா?
மதுரை - புனலுார் விரைவு ரயில் நாகையில் இருந்து இயக்கப்படுமா?
ADDED : நவ 09, 2024 10:15 PM
சென்னை:இலங்கை பயணியர் வசதிக்காக, மதுரை - புனலுார் ரயிலை நாகப்பட்டினத்தில் இருந்து இயக்குமாறு, தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு, கடந்த ஆகஸ்ட் 16 முதல் பயணியர் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக இயக்கப்பட்ட கப்பல், தற்போது, வெள்ளி, சனி சேர்த்து, 5 நாட்களாக இயக்கப்படுகிறது.
இது பயணியரிடம் வரவேற்பை பெற்று, முன்பதிவும் அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள், நாகையில் இருந்து இலங்கை செல்ல, இந்த சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர்.
ஆனால், மதுரையில் இருந்து நாகைக்கு போதிய ரயில் வசதிகள் இல்லை. எனவே, மதுரையில் இருந்து விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக, கேரளா மாநிலம் புனலுாருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலை, நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வகையில், நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத் தலைவருமான ஸ்ரீராம் கூறியதாவது:
இலங்கையில் உள்ள சுற்றுலா பயணியர் மற்றும் ஆன்மிக பக்தர்கள், தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு, குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களுக்கு அதிக அளவில் வருகின்றனர்.
ஆனால், அவர்கள் நாகைக்கு கப்பலில் வந்து இறங்கியதும், தென் மாவட்டங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய, நேரடியாக எந்த சேவையும் இல்லை.
எனவே, மதுரை - புனலுார் விரைவு ரயிலை, நாகப்பட்டினம் அல்லது காரைக்காலில் இருந்து புறப்படும்படி செய்து, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் வழியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.