ADDED : ஜன 06, 2024 07:40 AM

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சென்னை மற்றும் சுற்றியுள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதை எளிதாக்கவும், கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யிலும், 2018ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய பணிகள் துவங்கின.
தற்போது அங்கு, 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்' என்ற பெயரில் பஸ் நிலையம் திறக்கப்பட்டு, கூடவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சில தனியார்கள் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு நீதிமன்றத்தின் வாயிலாக பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி மீட்டது.
இதற்காக, அரசு அதிகாரிகள் அல்லும் பகலும் நீதிமன்ற வாசலிலேயே படுத்து கிடந்தனர். அரசு பணியை தங்களது சொந்த பணி போல அர்ப்பணிப்புடன் செய்தனர். அரசுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்து, அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியிலேயே, பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
காலம் மாறி, காட்சியும் மாறியது. 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணியை தொடர்ந்தது. கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் பணிகள் முடிந்து, தற்போது கடைசியாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், பல தடைகளை வென்று பேருந்து நிலையம் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டி, அவரது சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இதே பாணியில், 6,218 அரசு பள்ளிகளில் காலங்காலமாக செயல்பட்டு வரும் தமிழ் மன்றங்களின் பெயர்களை, 'முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்' என்று பெயர் மாற்றி, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படி, பிறர் சாதனைக்கு சொந்தம் கொண்டாடுவதும், எல்லா திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் சூட்டுவதும் எந்த வகையிலும் சரியல்ல.
தி.மு.க., சார்பில் கட்டப்படும் கட்டடங்களில், கருணாநிதிக்கு ஒரு சிலை என்ன, ஓராயிரம் சிலைகளை கூட வைத்துக் கொள்ளட்டும். மாறாக, மக்களின் வரிப்பணத்தில் இப்படி பெயர் சூட்டுவதும், சிலைகள் நிறுவுவதும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் என்பதில் சந்தேகமே இல்லை!