புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படுமா பழைய ஓய்வூதிய திட்டம்?
புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படுமா பழைய ஓய்வூதிய திட்டம்?
ADDED : டிச 09, 2024 04:12 AM

சென்னை: 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாண்டு பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலர் செல்லையா வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை, 2003ல் அன்றைய அ.தி.மு.க., அரசு நடைமுறைப்படுத்தியது. அன்று முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்; இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சி பொறுப்பேற்று, 42 மாதங்களாகியும், தி.மு.க., அரசு அதை நிறைவேற்றவில்லை.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன.
மற்ற மாநில அரசுகள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன. தமிழக அரசு இதுவரை இந்த அமைப்பில் இணையவில்லை.
எனவே, மத்திய அரசின் அனுமதியின்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த இயலும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாண்டு பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.