மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பயன்படுத்த சார் - பதிவாளர்கள் தயங்குவதாக புகார்
மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பயன்படுத்த சார் - பதிவாளர்கள் தயங்குவதாக புகார்
UPDATED : ஜூலை 25, 2025 01:30 AM
ADDED : ஜூலை 24, 2025 10:33 PM

சென்னை:மோசடி பத்திரப்பதிவு புகார்களை விசாரிக்க, சார் - பதிவாளர்களுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், அதை பயன்படுத்த தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதை பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டிஉள்ளது.
உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. மோசடி கும்பல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சட்ட ரீதியான நிவாரணம் கிடைப்பதில்லை.
நடவடிக்கை தேவை இதுதொடர்பாக, காவல் துறையில் புகார் அளித்தால், அவர்கள் விசாரித்து குற்றம் செய்தவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், மோசடியாக பதிவான பத்திரத்தை ரத்து செய்து, பாதிக்கப்பட்டவர் பெயருக்கு அந்த சொத்து மீண்டும் செல்ல, பதிவுத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக பதிவு சட்டத்தில், 77ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவை பயன்படுத்தி, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கியது.
ஆனால், இப்பிரிவு செல்லாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தால், மோசடி பத்திரங்கள் மீதான நடவடிக்கைகள் முடங்கின. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கையை சேர்ந்த முகமது அஷ்பக் என்பவர், தன் சொத்து தொடர்பாக மோசடி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
தன் சொத்து தொடர்பாக மோசடியாக பத்திரம் பதிவாகி உள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவிக்கிறார்.
இது குறித்து மாவட்ட பதிவாளர், சார் - பதிவாளர் ஆகியோர், மனுதாரருக்கும், அவரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பி விசாரணை மேற்கொள்ளலாம். பதிவு சட்டத்தின், 83வது பிரிவில் உள்ள வழிமுறையை பின்பற்றி, இதில் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கான, 77ஏ பிரிவுக்கு மட்டும் தான் தடை உள்ளது. இந்த சட்டத்தின், 83வது பிரிவின் அடிப்படையில், மோசடி பத்திரப்பதிவு குறித்து விசாரிக்க, எவ்வித தடையும் இல்லை.
பயன்படுத்த தயக்கம் உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பின்படி, குற்றவியல் சட்டப்படி, போலி ஆவணங்களை பயன்படுத்தியது, ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாகிறது.
ஆனால், மேலதிகாரி களின் வழிகாட்டுதல் இல்லாததால், இந்த சட்டப்பிரிவை சார் - பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். இது தொடர்பான விஷயத்தில் பதிவுத்துறை உயரதிகாரிகள் விரைவில் உரிய அறிவுறுத்தல்கள ் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.