ADDED : பிப் 06, 2025 01:58 AM

சென்னை: திருப்பரங்குன்றம் மலையை காக்க, பிப்ரவரி 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, ஹிந்து முன்னணி அறிவித்தது. முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு, ஆர்ப்பாட்டத்திற்கு ஹிந்து அமைப்புகளும், பா.ஜ.,வும் காட்டிய வேகத்தை பார்த்து, அதை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்திலேயே ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்க, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டத்திற்கு தமிழகம் முழுதும் இருந்து வந்து மக்கள் குவிய துவங்கினர். இதை தடுக்க முக்கிய நிர்வாகிகளை, அவரவர் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி செய்தது காவல் துறை. ஆனாலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று, நேற்று முன்தினம் மாலையில், பழங்காநத்தத்தில் ஹிந்து அமைப்புகள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தின. இடமும், நேரமும் முடிவான சில மணி நேர இடைவெளியில், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டது, ஹிந்து அமைப்புகளையும், பா.ஜ.,வையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில், பழங்காநத்தத்தில் திரண்ட கூட்டம் ஆளும் தி.மு.க.,வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட எழுச்சியை அறிந்ததும், பா.ஜ., மேலிட தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் எழுச்சியை தக்க வைக்க, திருப்பரங்குன்றம் முருகன் மலையை அபகரிக்க நடக்கும் முயற்சிகள் பற்றியும், சிறுபான்மை ஓட்டுகளுக்காக, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக, தி.மு.க., அரசு செயல்படுவது பற்றியும், தமிழகம் முழுதும் பிரசார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மாவட்ட அளவில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தும் யோசனையும் உள்ளது. பழங்காநத்தத்தில் திரண்ட கூட்டத்தில் மிரண்டு போயிருக்கும் தி.மு.க., அரசு, ஹிந்து அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க, எதை வேண்டுமானாலும் செய்யும். அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.