நடிகர் விஜய் படத்துக்கு சிக்கல் வருமா? வந்தால் அரசியலாக்க த.வெ.க., திட்டம்
நடிகர் விஜய் படத்துக்கு சிக்கல் வருமா? வந்தால் அரசியலாக்க த.வெ.க., திட்டம்
ADDED : ஜூன் 01, 2025 06:28 AM

'தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு, தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுத்தினால், அதுவே, 2026 சட்டசபை தேர்தலுக்கு, விஜய்க்கு பிரசார களமாக அமையும்' என்கின்றனர், அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.
நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில், அவருடைய கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அப்படம் ரிலீசாக உள்ளது. இனி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், பொதுத்தேர்வில் சாதித்த, மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து பல மாவட்ட மாணவ - மாணவியரை அழைத்து, விருது வழங்க உள்ளார்.
ஜனநாயகன், அரசியல் பேசும்படமாக இருக்கும்; அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, இப்படம், தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய ஆதரவை, மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுக்கும் என, நடிகர் விஜய் மற்றும் அவருடைய கட்சியினர் அடித்துப் பேசுகின்றனர்.
நம்பிக்கையில்லை
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்த படம் எவ்வித இடையூறும் இல்லாமல் வெளியாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. கடந்த கால நிகழ்வுகளை வைத்தே, இந்த சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
காரணம், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள், ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆளுங்கட்சியை கடுமையாக எதிர்த்து விஜய் அரசியல் செய்வதால், நிகழ்கால அரசியல் திரைப்படத்தில் கட்டாயம் எதிரொலிக்கும்.
அதனால், ஆளுங்கட்சியினர் படத்தை திரையிட விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குவர். குறைந்தபட்சம், மறைமுகமாகவாவது படத்துக்கு சிக்கல் ஏற்படுத்துவர். அதனால், படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் பிரச்னைகள் வெடிக்கலாம்.
ஒரு உச்ச நடிகரின் திரைப்படம் வெளியாகும்போது, அதே நாளில் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தால், ஒரு வாரம் கழித்து வெளியிடும் வகையில் சமரசம் பேசி முடிப்பர்.
ஆனால், ஜனநாயகன் படம் வெளியாகும்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் தயாரிப்பாளர், அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன்.
இவர், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவராக உள்ளதால், இப்படத்துக்கு போதியளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, ஜனநாயகன் படத்துக்கு குறைந்த அளவு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக, இப்போதே தகவல்கள் கிடைக்கின்றன.
சிக்கல் எதுவுமின்றி, ஜனநாயகன் படமும், அதில் சொல்லப்படும் கருத்துகளும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் நடிகர் விஜயின் விருப்பம். ஆனால், இருக்கும் சூழலைப் பார்த்தால், அப்படி சுமூகமாக எதுவும் இருக்காது போல் தெரிகிறது.
போராட தயார்
இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள், நடிகர் விஜயிடம் பேசியுள்ளனர். அப்போது, 'தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த காட்சிகள் சில படத்தில் இடம் பெற்றுள்ளன. மற்றபடி, யாருக்கு எதிராகவும் படம் எடுக்கப்படவில்லை. படத்துக்கு தடை ஏற்படுத்தப்படுமானால், அது எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும், அதை எதிர்த்து போராட தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.
'படத்துக்கு எந்த வகையில் தடை ஏற்படுத்தினாலும் அதை வைத்து, தேர்தல் நேரத்தில் பெரும் அரசியல் செய்வேன். அதன் வாயிலாகவும், சிலரின் முகமூடியை கிழிப்பேன்' என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
அதனால், ஜனநாயகன் படம், திரையுலகில் மட்டுமல்ல; அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -