திருநெல்வேலி, துாத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி தரவு மாயம்
திருநெல்வேலி, துாத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி தரவு மாயம்
ADDED : செப் 09, 2026 11:09 PM

சென்னை: 'திருநெல்வேலி, துாத்துக்குடியில், 1,400 காற்றாலை மின் நிலையங்களில், கடந்த ஆகஸ்ட் மாத உற்பத்தி தரவுகள் இதுவரை கிடைக்கவில்லை' என, காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள் சார்பில், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கணக்கெடுக்க, தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மின் உற்பத்தி தரவுகள், இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என, உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
கடந்த ஆக., மாதத்திற்கான மின் உற்பத்தி தரவுகளை, இதுவரை மின் வாரியம் வழங்காமல் உள்ளது.
இதுதொடர்பாக விசாரித்ததில், மின் வாரியம் மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இடையேயான கட்டண பிரச்னை காரணமாக, தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உற்பத்தி விபரத்தை தெரிவிக்காததால், காற்றாலைகள் வழங்கிய மின்சாரம், மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்திய விபரங்கள் துல்லியமாக தெரியவில்லை. இதுதொடர்பாக, மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தும், மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
