காற்றாலை சீசன் முன்னோட்டம்: 1 கோடி யூனிட் மேல் கிடைக்கிறது
காற்றாலை சீசன் முன்னோட்டம்: 1 கோடி யூனிட் மேல் கிடைக்கிறது
ADDED : ஏப் 16, 2024 05:53 AM

சென்னை : காற்றாலை சீசன் அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக, தற்போது தினமும் காற்றாலைகளில் இருந்து, ஒரு கோடி யூனிட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். மொத்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 60 சதவீதத்திற்கு மேலானவற்றை, தனியார் நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றன. மீதி மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
சீசன் காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. அடுத்த மாதம் காற்றாலை சீசன் துவங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக, சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து தினமும், ஒரு கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
மார்ச் முதல் கோடை வெயிலால், மின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கிறது. எனவே, மின் தேவையை பூர்த்தி செய்ய அந்த மின்சாரம் முழுதுமாக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு யூனிட் காற்றாலை மின் கொள்முதல் விலை சராசரியாக, 3.10 ரூபாயாக உள்ளது. இந்த மின்சாரம், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.

