தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
UPDATED : ஜூலை 07, 2025 05:51 AM
ADDED : ஜூலை 07, 2025 03:12 AM

சென்னை: தோழியை போதையில் மிதக்கவிட்டு, தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 23 வயது பெண், சென்னையில் தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த, 27 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
கடந்த மாதம் 27ம் தேதி, பெரம்பூர் பெண், தன் தோழியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மாலை, 6:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்'க்கு அழைத்துள்ளார்.
அதை ஏற்று, வேலுார் பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பப்'புக்கு சென்றுள்ளார். அங்கு தோழிகள் இருவரும் மது குடித்துள்ளனர். பின், அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது பெரம்பூர் பெண், தன் நண்பர்களான கொடுங்கையூரை சேர்ந்த மனாசே, 29, உள்ளிட்ட இருவரை, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளார்.
நள்ளிரவு வரை நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பேசிக்கொண்டே இருந்த போது, வேலுார் பெண் போதையில் மயங்கி துாங்கி விட்டார்.
அதிகாலை எழுந்த போது, தன் அருகே மனாசே படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடைகளும் கலைந்திருந்தன.
இதனால், தன் தோழி மற்றும் அவரது ஆண் நண்பர்களை கடுமையாக திட்டிவிட்டு, மறுநாள் தன் சொந்த ஊரான வேலுாருக்கு சென்றார்.
அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போது, பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.
இதனால், தோழி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மீது, வேலுார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலைய எல்லையில் நடந்திருப்பதால், புகார் மனு அங்கு மாற்றப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் புகார் அளித்த பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரம்பூர் பெண், அவரது ஆண் நண்பர் மனாசே, 29 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
கைதான பெண்ணும், ஆண் நண்பர்களும் சிறு வயதில் இருந்தே நட்புடன் பழகி வந்தவர்கள். அவர்கள் விரும்பியதால், தன் தோழியை போதையில் மிதக்க விட்டு, நண்பர்களுக்கு விருந்தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.