ரூ.14.2 கோடி கோகைன் போதைப்பொருள் வயிற்றில் மறைத்து கடத்திய பெண் கைது
ரூ.14.2 கோடி கோகைன் போதைப்பொருள் வயிற்றில் மறைத்து கடத்திய பெண் கைது
ADDED : டிச 18, 2024 01:01 AM

சென்னை:வயிற்றுக்குள் மறைத்து, 14.2 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் கடத்திய பெண் பயணியை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பெண் பயணி ஒருவர், சுங்க சோதனையை முடித்து வெளியே வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
விசாரணை
அவரிடம் விசாரணை செய்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் தந்தார். பயணம் குறித்து கேட்டதற்கு சுற்றுலா வந்துள்ளதாகவும், நண்பர் ஒருவருடன் இங்கு தங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது உடைமைகளை சோதித்து பார்த்ததில், சந்தேகிக்கும்படி எதுவும் இல்லை.
அதிகாரிகள் சந்தேகப்படுவதை அறிந்ததும், அந்த பெண் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது போன்று நடித்தார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, வயிறு பகுதியை, 'ஸ்கேன்' செய்து பார்த்தனர். அதில், வயிற்றுக்குள் பெரிய அளவிலான, 'கேப்சூல்' வடிவ மாத்திரைகள் இருந்து உள்ளன.
1.24 கிலோ எடை
இதையடுத்து, அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நான்கு நாட்கள் அனுமதித்து, வயிற்றுக்குள் இருந்த மாத்திரைகளை வெளியே எடுத்தனர். 1.24 கிலோ எடையில், 90 மாத்திரைகள் இருந்தன.
அவற்றை சோதனை செய்ததில், கோகைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
அதன் சர்வதேச மதிப்பு, 14.2 கோடி ரூபாய். அதை கடத்தி வந்த பெண், எய்ட்ஸ் நோயாளி என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.