ADDED : ஜன 15, 2024 06:59 AM
புதுச்சேரி : ஜிப்மர் டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மேரி ஸ்டீபன், 30; ஜிப்மர் மருத்துவமனை சீனியர் டாக்டர். இவரது மனைவி ஜெயஸ்ரீயும் அதே மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
இருவரும் வேலைக்கு செல்வதால், தங்களது 1 வயதுடைய மகனை பராமரிக்க முத்திரையர்பாளையம், கம்பன் வீதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வேலைக்கு வைத்தனர். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த அக். 24ம் தேதி குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாடினர். அப்போது, பீரோவில் இருந்து குழந்தையின் நகையை எடுத்தபோது, ஒரு நகை காணாமல் போய் இருந்தது.
அதே போன்று, நகை பெட்டியில் வைத்திருந்த பிரேஸ்லெட், செயின், மோதிரம் என 9 சவரன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக கவிதா வேலைக்கு வரவில்லை. ஆனாலும், குழந்தையை பாசமாக கவனித்து வந்ததால், கவிதா மீது, டாக்டர் தம்பதிக்கு சந்தேகம் வரவில்லை. இருந்தும், நகை மாயமானது குறித்து குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கவிதாவின் கணவர் மதன், டாக்டர் மேரி ஸ்டீபனை தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டில் நகைகளை எனது மனைவி திருடி அடகு வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது' என தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரிக்க சென்றபோது, கவிதா வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து கவிதாவை கைது செய்து, 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கவிதாவை நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.