பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: வன்கொடுமை வழக்கு பதிந்ததும் தலைமறைவான திமுக எம்எல்ஏ மகன்
பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: வன்கொடுமை வழக்கு பதிந்ததும் தலைமறைவான திமுக எம்எல்ஏ மகன்
ADDED : ஜன 19, 2024 05:00 PM

சென்னை: 18 வயது பட்டியலின பெண்ணை துன்புறுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் தலைமறைவாகினர்.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில், 18 வயது பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். எம்.எல்.ஏ., மகன் ஆன்ட்ரோ,35 மற்றும் மருமகள் மார்லினா, 31, ஆகியோரால் கடுமையாக தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏ.,வின் மகன் ஆன்ட்ரோ, அவருடைய மனைவி மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆன்ட்ரோ, மார்லினா இருவரும் தலைமறைவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

