'மத்திய அரசின் திட்டத்தில் பெண்களுக்கு அதிக பயன்'
'மத்திய அரசின் திட்டத்தில் பெண்களுக்கு அதிக பயன்'
ADDED : பிப் 25, 2026 06:37 AM

சென்னை: “பெரும்பாலான பெண்கள், 2014க்கு முன்பு வங்கி வாசலுக்கே சென்றதில்லை. தற்போது, மத்திய அரசின், 'ஜன் தன் யோஜனா' திட்டம் வாயிலாக, ஏராளமான பெண்கள் வங்கி கணக்கு துவக்கி உள்ளனர்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான இரண்டு நாள் ஒருங்கிணைந்த சேவை முகாம், மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று துவங்கியது. முகாமை, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், முருகன் பேசியதாவது: பெரும்பாலான பெண்கள், 2014க்கு முன்பு வங்கி வாசலுக்கே சென்றதில்லை. இன்று, மத்திய அரசின் 'ஜன் தன் யோஜனா' திட்டம் வாயிலாக ஏராளமானோர் வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். தமிழகத்தில், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ், 1.8 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.
'முத்ரா யோஜனா' திட்டத்தில், 3.6 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு என மாதந்தோறும், தமிழகத்தில் 3.6 கோடி பேர், பிரதமர் உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

