ஓய்வறை இன்றி பெண் டாக்டர்கள் அவதி: பாதுகாப்பும் கேள்விக்குறி என குற்றச்சாட்டு
ஓய்வறை இன்றி பெண் டாக்டர்கள் அவதி: பாதுகாப்பும் கேள்விக்குறி என குற்றச்சாட்டு
ADDED : செப் 23, 2024 02:05 AM

சென்னை: அரசு மருத்துவமனைகளில் ஓய்வறை இல்லாமலும், இருபாலின கழிப்பறை முறையாலும் அவதிப்பட்டு வருவதாக, பயிற்சி பெண் டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் வார்டில், முதுநிலை பயிற்சி டாக்டர்கள் தான் பெரும்பாலும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அசோசியேட் பேராசிரியர்களுக்கு தனித்தனியாக, அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அதேநேரம், 10 முதல் 14 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பணியாற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஓய்வறை ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
சில அரசு மருத்துவமனைகளில், பயிற்சி டாக்டர்களுக்கு ஓய்வறை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் ஒரே அறை மற்றும் கழிப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சில அரசு மருத்துவமனைகளில் அவை கூட இல்லாமல், நோயாளிகள் வார்டிலேயே பயிற்சி டாக்டர்கள் சாப்பிடுவது முதல் ஓய்வெடுப்பது வரை நடைபெறுகிறது.
உள்நோயாளிகள் பிரிவில், இரவில் பணியாற்றும் பெண் டாக்டர்கள் அசதியில் ஓய்வெடுக்க நினைத்தாலும், முறையான ஓய்வறை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
சில அரசு மருத்துவமனைகளில் ஓய்வறை ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக பராமரிக்காமல், கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி டாக்டர்களுக்கு, ஆண், பெண் என தனித்தனியாக ஓய்வறை ஒதுக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணைய பரிந்துரைப்படி, 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டிருந்தாலும், செயல்படாத நிலையில் இருப்பதால் டாக்டர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.